ஹீல் ஓய சுற்றுலா கிராமம்

மெததும்பர பிரதேசம்கண்டி மாவட்டம்

கண்டிய இராச்சியத்தின் புகழ்பெற்ற மலைப்பகுதிகளில் உள்ள தும்பர பள்ளத்தாக்கில் (மூடுபனி பள்ளத்தாக்கு) அமைந்துள்ள பரந்த சிறிய குக்கிராமமான ஹீல்ஓய அன்றைய மன்னர்களால் மிகவும் விரும்பப்பட்ட நிலமாகும். பசுமையான காடுகள் மற்றும் நீலம்போர்த்த மலைகளால் சூழப்பட்ட இந்தப் பள்ளத்தாக்கு, நிலத்தால் சூழப்பட்ட மலையக இராச்சியத்திற்கு சிறந்த இயற்கைப் பாதுகாப்பை வழங்கியதோடு, மன்னர்களின் ஆதரவால், ஆடம்பரமுமான பிரதேசமாக விளங்கியது. பள்ளத்தாக்கின் வளமான மண், அப்பிரதேச வேளாண்மையை அதிசய சோலையாக்கியது. பல மலைகளால் சூழப்பட்டுள்ள இந்தப் பகுதி, நெல் சாகுபடி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு வளமான நீர்ப்பாசனத்தை வழங்கும் நீர்வீழ்ச்சிகள், ஆறுகளின் வரிசையால் சூழப்பட்டுமுள்ளது.

 

இக்கிராமத்தின் வயல்நிலங்கள் கி.மு 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர்களால் பம்பரகல குகைக் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குகையின் மேற்புறத்தில் உள்ள பிராமி கல்வெட்டுகள், அந்தக் காலத்தை ஆண்ட மன்னன் இந்த குகைக் கோயிலை சங்கத்துக்கு பட்டயம் பண்ணி வழங்கியதை வெளிப்படுத்துகின்றன. இதற்கு மேலும் உறுதியான சான்றாக, பம்பரகல குகைக் கோவிலுக்குச் சொந்தமான பழங்கால தானியக் களஞ்சியம் மற்றும் தற்போதுள்ள புதுப்பிக்கப்பட்ட தானியக் களஞ்சியம் ஆகியவற்றின் இடிபாடுகள் இந்த கிராமத்தில் இன்னும் உள்ளன. மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனும் (கி.பி. 1747-1782) பம்பரகல குகைக் கோவிலின் வயல் நிலங்களை, கிராமத்தில் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சியான கலுதியவல (கறுப்பு குளம்) நீரால் பாசனம் செய்வதற்காக நீர்க் கால்வாய்களை வெட்டினான். இவற்றின்படி இந்த கிராமத்தின் வரலாறு 2000 ஆண்டுகளுக்கும் மேலானது. முன்னாள் தொல்பொருள் ஆணையர் முனைவர் செனரத் பரணவிதான தனது சிலோன் கல்வெட்டு தொகுதி 1 (1970) இல்,பம்பரகல கல்வெட்டுகள் நூற்றாண்டு மற்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கு அப்பாற்பட்டவை என்று எழுதுகிறார்.

 

பம்பரகல விகாரையானது கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் (கி.பி. 1747-1782) மன்னரின் ஆட்சிக் காலத்தில், தம்ப சன்னாச (செப்புத் தகடுகளில் எழுதப்பட்ட அரச கட்டளைகள்) படி, கண்டிக் காலத்தில் கட்டப்பட்டது. சுற்றியுள்ள நிலங்கள் அக்கால மன்னரால் பம்பரகல குகைக் கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இந்த கிராமம் 162 ஹெக்டேயர் நெல் வயல்களைக் கொண்டுள்ளது. எனவே, ஹீல்ஓயவின் பரப்பளவில் 6.7 ஹெக்டேயர் நெல் வயல்கள், இன்றும் சங்கத்திற்கு சொந்தமானது.

 

பசுமை போர்த்திய நெல் வயல்களைக் கொண்ட இந்த சிறப்புவாய்ந்த இடம், பொத்தல்கொட ஓயா, ஹீல் ஓயா, கல்மல் ஓயாவின் தெளிவான நீர், சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான காற்று, செழிப்பான காலநிலை, பாரம்பரிய இலங்கை உணவு, பாரம்பரிய கண்டிய உணவு வகைககளை அனுபவிக்கும் அதேவேளையில் இலங்கையில் ஆழமாக வேரூன்றிய கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும் பார்வையாளர்களை அழைக்கிறது. கீழ் மலைச் சரிவுகளிலிருந்து உயரமான நக்கிள்ஸ் வரையிலான பயணங்கள், உள்ளூர் தாவர இனங்கள், பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள், உள்ளூர் நன்னீர் வாழ் தாவரங்கள், விலங்குகள் உட்பட பல்லுயிர்களின் நம்பமுடியாத செழுமையை அனுபவிக்க ஒரு அற்புதமான வாய்ப்பை இது வழங்குகிறது.

 

வறிக சபாவ (குல சபை)        

பண்டைய கிராம சபையானது உள்நாட்டு ஆட்சி முறையின் சிறிய குழு தொடர்பை அடிப்படையாகக் கொண்டது. முறையான சமூகப் பங்கேற்புக்காக இந்த கிராமசபை முறை நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. சொர்க்கலோகம் போன்ற நிலப்பரப்பில் அமைந்துள்ள ஹீல்ஓயவின் திறந்த கிராம சபையின் தலைமைப்பீடம், ஏனைய பகுதிகளைவிடப் பெரியதும் உயரமானதுமாகும். இந்தப் பீடத்தின் நடுவில் சில வரலாற்றுச் சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில், கட்டுமானம், நீர்ப்பாசனம், சமயம், அரச பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட அபிவிருத்தி முயற்சிகளில் முக்கியமாகக் கவனம் செலுத்திய முறையான ஆளும் முறை இலங்கையில் இருந்தது. முன்னதாக இது சபா என்று அழைக்கப்படும் ஒரு சிறிய குழு சபையாக இருந்தது, அங்கு இவை தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட்டன

 

கதிரடிக்கும் தளம் மற்றும் சுங்கம்

நெல் சாகுபடியில் கதிரடிக்கும் தளம் மிகவும் மரியாதைக்குரிய இடமாகும். இது ஒரு தெய்வீகத் தலமாகப் பேணப்படுகிறது. விவசாயிகள் சோதிடத்தின்படி நல்ல நேரம் பார்த்து இங்கு வேலை செய்வார்கள். இந்தக் கிராமத்தில் மூன்று வகையான கதிரடி தளங்கள் உள்ளன, அவை கல் கமத (கல்லால் செய்யப்பட்ட கதிரடி தளம்), பிம் கமத (நெல் வயலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சுத்தமான நிலப்பரப்பு) வெல் கமத (நெல் வயலில் உருவாக்குவது, இது நிரந்தரமானது அல்ல.)

 

 கடத்துரா கல் லேன (கடத்துரா கற்குகை)

கண்டிய இராச்சியத்தின் கடைசி மன்னன் எதிரிகளிடமிருந்து தப்பிக்க இந்த குகையைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. நாட்டுப்புறக் கதைகளின்படி, குகையின் பிரதான திறப்பு திரைச்சீலைகளால் (சிங்கள மொழியில் கடத்திர) மூடப்பட்டிருந்ததோடு மறைவிடமாக பயன்படுத்தப்பட்டது. திரைச்சீலையின் கொக்கிகளுக்கு செய்யப்பட்டதாக நம்பப்படும் துளைகள் குகை மேற்கதவில் காணப்படுகின்றன. கடத்துரா கல் லேன என்ற பெயர், திரைச்சீலைகளால் மூடப்பட்ட குகை (கடத்திர) என்பதிலிருந்து பெறப்பட்டது. குகையைத் துளையிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களும் உபகரணங்களும் தனித்துவமானவை.

 

கலுதிய பொகுண (கறுப்பு குளம்)

கண்கவர் ஆனால் அச்சமூட்டும் ஆழமான கறுப்பு குளம்இந்த அழகிய கிராமத்தின் முடிவில் பாயும் "ஹீல்ஓயா" ஆற்றின் மிகவும் கவர்ச்சிகரமான பகுதிகளில் ஒன்றாகும். தங்கப்புவவில் இருந்து ஆரம்பமாகி ஆனமலை தேயிலைத் தோட்டத்தின் ஊடாகப் பாயும் ஹீல் ஓயா ஆற்றின் பயணத்தின் பாதியிலே இந்தக் கறுப்புக் குளம் காணப்படுகிறது. பின்னர் அருவியாகக் கீழே விழுந்து 28 மீ உயரமுள்ள "ரன் எல்ல" நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. இதன் அடியில் வசீகரமான "கறுப்புக் குளம்" பெரிய பளபளக்கும் கறுப்பு இரத்தினம் போல் மின்னுகிறது. சுமார் 30 மீ ஆழம் கொண்ட இந்தக் குளம் அமைதியான நீர் நிலையுடன் பரந்து, குளிர்ச்சியாகவும் சாந்தமாகவும் காட்சியளிக்கிறது. இந்தக் கறுப்புக் குளத்தின் தீண்டப்படாத நீர் மீண்டும் அவசரமாக கீழே ஓடி, பேர்ன்சைட்ஸ் தேயிலைத் தோட்டத்தின் பக்கத்திலிருந்து ஹீல் ஓயாவை சந்திக்கிறது. இதன் பாதை, பாறைகள் மிகுந்த அபாயகரமான வழி என்றாலும், சாகசப் பிரியர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். ஹீல்ஓய வட்டகல வீதியானது அழகிய காட்சிகளுக்கான மற்றொரு வழியாகும். இந்தப் பாதையில் சென்றால், பால ஹீல்ஓய வத்தை மரப்பாலத்தின் மீதாகச் சென்று பேர்ன்சைட் பழைய வண்டிச் சாலை வழியாகப் பயணிக்கலாம்.

 

பெருமாள் வெடுன எல்ல (பெருமாள் விழுந்த நீர்வீழ்ச்சி)

இந்த சிறிய அழகிய நீர்வீழ்ச்சி, ஹீல்ஓயாவுக்கு சொந்தமான நீரோடையின் ஓரத்தில் உள்ளது. நாட்டுப்புறக் கதைகளின்படி, பெருமாள் என்ற ஒரு தொழிலாளி இந்த வீழ்ச்சியில் விழுந்து இறந்தார். எனவே, இந்த நீர்வீழ்ச்சிக்கு பெருமாள் வெடுன எல்ல என்று பெயரிடப்பட்டது. நீரோடையின் வழியே நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை எளிமையானதோடு, பாறையின் கீழ் வழிந்தோடி  நீர் குமிழிகளை உருவாக்கும் தெளிந்த நீரை அடைவது கடினமானதும் அல்ல.

 

ஹீல்ஓயா

அமைதியாக ஓடும் ஹீல்ஓயா, மீன், நீர்வாழ் பூச்சிகள், தும்பிகள், நன்னீர் நண்டுகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இந்த நீரோடையின் நீரேந்துப் பரப்பு, ரங்கலவில் உள்ள மேகக் காடுகளாகும். அங்கிருந்து, பேர்ன்சைட் தேயிலைத் தோட்டத்துடன் கிட்டத்தட்ட 14 கி.மீ தூரம் ஓடுகிறது. பொட்டல்கொட ஓயா, ரெட்டியாகம ஓயா, கல்பொத்து ஓயா, பம்பரகன் ஓயா ஆகியன சுமார் 8 கி.மீ வரை பாய்ந்தோடினாலும் அங்குருவெல்ல வத்தையானது விக்டோரியா நீர்த்தேக்கத்தை நிறைப்பதற்காக மொரகஹமுல்லவில் உள்ள பாலத்தின் ஊடாக செல்லும் கல்ஓயாவின் பிரதான நீரோடையுடன் இணைகிறது.

   

பொட்டல்கொட ஓயா 

ஹீல்ஓய கிராமத்தின் வாயிலுக்கு வரும் பயணிகளை வரவேற்கும் நீரோட்டம், பொட்டல்கொட ஓயாவின் சிறிய பாலத்தின் கீழாகப் பாய்ந்து, ஹீல்ஓயாவுக்கான நுழைவாயிலை காண்பிக்கிறது

 

வருடாந்த விவசாய நடவடிக்கைகள்

ஹீல்ஓயவின் வானிலையானது, இரண்டு பருவமழை காலங்கள் மற்றும் பருவமழைக்கு இடைப்பட்ட காலநிலை மாற்றங்களால் உருவாக்கப்படுகின்றன. 'யால' பருவமழை மே, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் கடுமையான மழைவீழ்ச்சியைத் தருகிறது. டிசம்பர் முதல் மார்ச் வரை வறண்ட காலமாக இருக்கும். 'மகா' பருவக்காற்று இலங்கையின் வடகிழக்கு பருவமழையின் ஈரப்பதத்தை அக்டோபர் மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கொண்டுவந்து, இந்த கிராமத்தில் பெருமழையாகக் கொட்டுகிறது. ஒரு போக அறுவடைக்குப் பிறகு, வயல் அடுத்த போகத்துக்கு தயாராகும். விவசாயிகள் தோட்டத்தை மண்வெட்டியால் கொத்துவதும், எருமைகளைக் கொண்டு நிலத்தை உழுவதும் இந்தக் கிராமத்தில் நடைமுறையிலுள்ள ஆழமான வேரூன்றிய பழக்கமாகும்

 

Villa life

 

மலைநாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறையை அனுபவித்தல்

வியத்தகு ஞானம் கொண்ட பூர்வகுடிகளின் அறிவும் சூழலியல் நிலைத்தன்மை சமூகமும்

இலங்கை பூர்வகுடிகளின் ஞானம் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானங்கள், பாரம்பரிய தொழில்கள், உள்நாட்டு மருத்துவ முறைகள், பாரம்பரிய நீதி அமைப்புகள், சுற்றுச்சூழல் மாற்றங்களைச் சமாளிப்பதற்கான உத்திகள் ஆகியவற்றில் இயற்கை சூழலுடன் அவர்களின் எண்ணற்ற தொடர்புகள் என அதிமேம்பட்ட தகவல்களை உள்ளடக்கியது. விவசாயம், உணவுத் தயாரிப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, பாரம்பரிய விளையாட்டு, பாதுகாப்பு முறைகள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றில் அதன் உறுதியான அடித்தளத்துடன் தனித்துவமான கலாச்சார பாரம்பரியம் உருவாகியுள்ளது. இருப்பினும், சமூக அரசியல் மற்றும் பொருளாதார நவீனமயமாக்கலின் முன்னேற்றத்தின் காரணமாக, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் இந்த வளமான தகவல்கள் இன்று மருவி வருகின்றன. எனவே, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இந்த பாரம்பரிய அறிவியல்கள் எதிர்கால சந்ததியினருக்குக் கடத்தப்பட வேண்டும்.

இந்த மதிப்புக்குரிய பூர்வீக அறிவு இழக்கப்படுகிறது, எனவே பாரம்பரிய அறிவு கல்வியில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் மற்றும் பாரம்பரிய கலாச்சாரம், அறிவு, திறன் ஆகியவற்றைப் பெறவும் மதிக்கவும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்

ஹீல்ஓய யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான நக்கிள்ஸ் வரம்பில் அமைந்துள்ள பாரம்பரிய கிராமமாகும், இங்கு இலங்கை மலைநாட்டின் பாரம்பரிய வளங்களை அனுபவிக்க முடியும்.

 

More things to do