இலங்கையின் மத்திய மலைநாடு - குறிப்பாக கண்டி - ஒரு வளமான மற்றும் சுவாரசியமான வரலாற்றைக் கொண்டது. இது ஏனைய தாழ்நில பிரதேசங்களில் காணப்படுவதிலிருந்து சில அம்சங்களில் வேறுபட்டது. கண்டிய பாணி நடனமானது கலாச்சாரத்துடன் தொடர்புடைய மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். நிகழ்ச்சியில் பலதரப்பட்ட கலைஞர்கள் இடம்பெறுவார்கள். மத்தளம், உடைகள், மத்தளம் கொட்டும் பாணி ஆகியவை தீவின் குறிப்பிட்ட பகுதிகளுக்கான தனிப்பட்ட விசேடத்துவத்தைக் கொண்டிருப்பதால், இவற்றில் பெரும்பாலானவை பொதுவாக பிராந்திய கொண்டாட்டங்கள், பண்டிகைகளின்போது நிகழ்த்தப்படுகின்றன. கம்பீரமான யானை உலா, வண்ணமயமான மயிலாட்டம், நாகப்பாம்பு ஆட்டம் ஆகியவற்றைக் காட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாரம்பரியமான இலங்கை முகமூடிகளும் சில நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன; அவை நாடகங்களுக்கு கவர்ச்சியையும் மறைபொருளையும் அளிக்கின்றன.
கண்டிய நடனத்தில் பயன்படுத்தப்படும் மத்தளம் கெத்த பெர என்றும், ருஹுணுவில் (கீழ்நாடு) நடனத்துக்கான மத்தளம் “யாக் பெர” என்றும், சபரகமுவ நடனத்தின் மத்தளம் “தவுல” என்றும் அழைக்கப்படுகிறது (சிங்களத்தில் பெர என்றால் “மத்தளம்” என்று பொருள்.) யக் பெரவைப் போலவே கெத்த பெரவும் கைகளால் அடிக்கப்படுகிறது, அதே சமயம் தவுல ஒரு பக்கம் குச்சியாலும், மறுபுறம் ஒரு கையாலும் இசைக்கப்படுகிறது; கெத்த பெர நடுவில் பருமனான விளிம்பில் சுருங்கிய வடிவம் கொண்டது, அதே சமயம் யாக் பெர, தவுல இரண்டும் உருளை வடிவங்களைக் கொண்டன.
மகுல் பெர வாதனய (தொடக்க மேளம் கொட்டல்)
புராதன சிங்கள இராச்சியங்களின் காலத்திலிருந்தே, எந்தவொரு விசேட நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் மத்தளம் கொட்டி ஆசி பெறுவது ஒரு பாரம்பரிய சடங்காகும். மத்தளம் கொட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் தாளச் சொற்களின் எழுத்துக்களான "கான" நன்மை பயக்கும் என்றும் அதன் விளைவாக எழும் ஒலி செழிப்பை ஏற்படுத்துவதாகவும் சிங்கள சமூகத்தில் நம்பிக்கை நிலவுகிறது. எசல பெரஹெராவின் தொடக்கத்தில், தலந்த மாளிகையிலும் நான்கு தேவாலயங்களிலும் இந்த ஆரம்ப பறை அடித்தல் நிகழ்த்தப்பட்டது. எசல பெரஹெரவின் தொடக்கத்தில், தலதா மாளிகையிலும் நான்கு ஆலயங்களிலும் இந்த தொடக்க மத்தளம் கொட்டல் நிகழ்த்தப்பட்டது.
பூஜை நடனம்
இந்த நடன நிகழ்ச்சியானது மும்மணிகளிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக நடத்தப்படுகிறது, இதில் முக்கியமானது புத்தரின் புனித பல். இந்த நடன நிகழ்ச்சி பண்டைய சிங்கள மன்னர் காலத்தில் இருந்து இடம்பெறுகிறது. இன்று இந்த பூஜை நடனம் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பங்கேற்பாளர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கும் நோக்கத்துடன் நிகழ்த்தப்படுகிறது.
தெவொல் நடனம்
இந்த நடன மரபு இலங்கையின் மாத்தறை, காலி, தங்காலை, பெந்தோட்டை, களுத்துறை ஆகிய பகுதிகளுக்கான நடனமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய நாட்களில், விழாவில் பங்கேற்பவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உதவிகளை வழங்குவதற்கும், தெவொல் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், கீழ்நாட்டு பகுதிகளில் வணங்கப்படும் கடவுளை நினைவுகூரும் வகையிலும் இந்த நடன நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.
மயூர வண்ணம (மயிலாட்டம்)
மயில் இலங்கையிலும் இந்தியாவிலும் சிறப்புமிக்க கவர்ச்சிகரமான பறவையாகும். மயிலின் இயற்கையான நிறத்தைப் பார்ப்பதன் மூலம் ஒருவர் பெறும் மனமகிழ்ச்சி அவரின் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்பது வண்ண அறிவியல் நிபுணர்களின் கருத்தாகும். இலங்கையில் போற்றுதற்குரிய கதிர்காமக் கந்தனின் வாகனம் மயிலாகும், கதிர்காமம் எசல பெரஹெர திருவிழா ஊர்வலத்தில்கூட மயிலாட்டம் அல்லது மயில் நடனம் விசேட இடத்தைப் பெறுகிறது. மயிலின் குணாதிசயங்கள் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. மயிலின் வடிவமானது வெவ்வேறு கோணங்களில் நடனத்தின் மூலம் காட்டப்படுகிறது.
இந்த நடன நிகழ்ச்சியானது கதிர்காமக் கந்தனைப் போற்றுவதற்காக நிகழ்த்தப்படும் அதேவேளை, திருவிழாவில் கலந்துகொள்பவர்களை ஆசீர்வதிப்பதும் இதன் நோக்கமாகும்.
பந்தேரு நடனம்
பந்தேருவ என்ற இசைக்கருவியைப் பயன்படுத்தி பந்தேரு நடனம் ஆடப்படுகிறது. இந்த வாத்தியம் அனைத்து புதன்கிழமைகளிலும், போயா நாட்களிலும், "கவிகார மடுவ"வில் (கவியரங்கம்) புனித தந்த தாது ஆலயம் பற்றிய கவிதைகள் பாடப்படும் போதும் இசைக்கப்படுகிறது. நடனத்தையும் உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியின் நோக்கம், புத்தபெருமானின் புனிதமான பல்லின் சக்தி மற்றும் வலிமை தொடர்பான கவிதைகளை பாடுவதன் மூலம், பங்கேற்பாளர்கள் மீது புனிதப் பல்லின் ஆசிகளை வேண்டுவதாகும்.
றபன் நடனம்
றபன் தாளத்துடன் வழங்கப்படும் இந்த நடன நிகழ்ச்சியின் நோக்கமும், மும்மணிகளின் தலைமையிலான மலையகப் பகுதியில் வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ள கடவுளின் ஆசீர்வாதத்தை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதாகும்.
நாக குருலு நடனம்
புத்தரின் வாழ்க்கை மற்றும் ஏழு வார ஹோமங்கள் தொடர்பான கதைகளுடன் நாகம் தொடர்புபட்டுள்ளது. இலங்கையிலும் மகா பாரதத்திலும் (இந்தியா) நாகப்பாம்பு என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாகக் காட்டப்படுகிறது. குருலு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த பறவை. இமயமலையில் குருலு பறவைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குருலு பறவைகள் நாகப்பாம்பை பிடித்து உணவாக உட்கொண்டதாகத் தெரிய வருகிறது. பௌத்த இலக்கியங்களை சமுதாயத்திற்கு நினைவூட்டுவதே நாக குருலு நடன நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
வெஸ் நடனம் (கஜகா வண்ணம்)
கண்டிய நடனத்தின் முக்கிய ஆடை "வெஸ்" என்று அழைக்கப்படுகிறது. கண்டிய நாட்டிய இலக்கியத்தின்படி, இந்த ஆடை மன்னன் இராவணனின் ஆடைகளை ஒத்திருக்கிறது. இன்று, "கஜகா வண்ணம" என்ற நடனமே, இந்த ஆடை அணிந்து வழங்கப்படுகிறது. கஜகா வண்ணம, திருவிழா ஊர்வலத்தில் புத்தரின் புனித பல் கலசத்தை சுமந்து செல்லும் யானையின் நடைபாணியின்படி உருவாக்கப்பட்டது. இந்த நடன நிகழ்ச்சியின் நோக்கம் புனித பல்லுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவதும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும் ஆகும்.
கினிசிசில (தீ நடனம்)
புராதன காலத்திலிருந்தே வரும் மந்திரம் என்ற ஸ்லோகங்கள் மூலம் நெருப்பு குளிர்விக்கப்படுகிறது. இந்த நடனத்தின் நோக்கம் கதிர்காமக் கந்தனுக்கு மரியாதை செலுத்துவதும், பக்தர்களுக்கு கடவுளின் ஆசிகளைப் பெறுவதும் ஆகும். கண்டி புனித தந்த தாது ஆலயத்தின் ஊர்வலம் நிறைவடைந்தவுடன் கதிர்காம கோயிலில் தீயை ஏந்தியபடி ஆடுவதையும் தீ மிதிப்பதையும் அவதானிக்க முடியும். இதுவும் ஆசி வேண்டுவதை நோக்கமாகக் கொண்டது. "கினிசிசில" எனப்படும் இன்றைய நடன நிகழ்ச்சியின் நோக்கம், பங்கேற்பாளர்களுக்கு கதிர்காம கடவுளின் பாதுகாப்பையும் உதவியையும் வழங்குவதும், பண்டைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் மதிப்பை அறிமுகப்படுத்துவதும் ஆகும்.