உடவத்தகெலே சரணாலயத்தில் பறவை நோக்கலும் மலையேறலும்

முன்னுரை

இயற்கை பல்லுயிர் பெருக்கம் நிறைந்த நாடாக விளங்கும் இலங்கை, அதை பலவாறாக நிரூபித்து வருகிறது. கண்டி ஏரிக்கு வடக்கே 104 ஹெக்டேயர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது உடவத்தகலே இயற்கை சுற்றுலா தளம். கண்டி இராச்சியத்தின்போது தடைசெய்யப்பட்ட காடாக இருந்த இந்தப் பூங்கா உட வாசல வத்த (அரச அரண்மனைக்கு மேலே உள்ள தோட்டம்) என்று அழைக்கப்பட்டது. பார்வையாளர்கள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்க்கலாம். 1856 ஆம் ஆண்டு முழுப் பூங்காவும் வனக் காப்பகமாக அறிவிக்கப்பட்டு 1938 ஆம் ஆண்டு சரணாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பூங்காவில் பறவையினத் தொகுதிகளின் பிரத்யேக சேகரிப்பு உள்ளதோடு, இது இலங்கையின் மிக அழகான பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும்.
புனித தந்த தாது கோயிலுக்கும் மலையக - அருப்பொல புறநகர்ப் பகுதிக்கும் இடையே நீண்டு கிடக்கும் மலை முகட்டில் உடவத்த கெலே அமைந்துள்ளது. இந்த மலைமுகட்டின் மிக உயரமான பகுதி கடல் மட்டத்திலிருந்து 635 மீற்றர் மற்றும் அருகிலுள்ள கண்டி ஏரிக்கு மேலே 115 மீற்றர் உயரத்தில் உள்ளது.


இந்த சரணாலயத்தில் வன ஆசிரமம், சேனாநாயக்காராமய, தபோவனய ஆகிய மூன்று பௌத்த வன மடங்கள் உள்ளன. அத்துடன் சித்தவிசுத்தி-லேன, மைத்ரி-லேன, செங்கடண்கல-லேன எனும் புத்த பிக்குகளுக்கான மூன்று குகைக் குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இந்த சரணாலயம் கண்டி நகருக்கான நீரேந்துப் பகுதியாகக் காணப்படுகிறது. உடவத்த கெலே சரணாலயத்தில் மஞ்சள்முக குக்குறுவான், லேயர்ட்ஸ் நெடுவால் கிளி, புள்ளிகள் கொண்ட காட்டு ஆந்தை, இலங்கை தொங்கும் கிளி, பச்சைமுக பச்சைச்சிட்டு, இலங்கைக்கான சின்ன மீன்கொத்தி, இலங்கை மலை மைனா உள்ளிட்ட பல்வேறு வகையான (சுமார் 80 வகையான) பறவையினங்களைக் காணலாம். எனவே, பறவை வல்லுநர்கள் தொலைநோக்கியுடன் பறவை வாழ்க்கையை ஆராய இது சிறந்த இடமாகும். இப்பகுதி ஆண்டுக்கு சுமார் 1615 மி.மீ மழைப்பொழிவையும் 24 பாகை செல்சியஸ் வெப்பநிலையையும் கொண்டது. கண்டி நகரையும் வண்ணத்துப்பூச்சிகளையும், உங்களுக்கு மிக அருகே வரும் பாலூட்டிகளையும் புகைப்படமாக எடுத்துக்கொள்ள இந்தச் சரணாலயம் சிறந்த இடமாகும். செங்குரங்கு, குள்ளநரி, முள்ளம்பன்றி, சருகுமான் உள்ளிட்ட உள்ளூர் விலங்குகளை இலகுவில் காணலாம். 460 வகை தாவரங்கள், குறிப்பாக பெருங்கொடிகள், புதர்கள், மூலிகைகள், சிறிய தாவரங்கள் இந்தக் காட்டில் காணக்கிடைக்கின்றன.

 

கித்துல்கலவில் பறவை நோக்கலும் மலையேறலும்

முன்னுரை

 

கிதுல்கலவில் உள்ள மாகந்தவ வனக் காப்பகம் (195 ஹெக்டேயர்) களனி ஆற்றின் நீர்ப்பிடிப்பைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டதோடு இலங்கையின் பல உள்ளூர் விலங்கினங்களதும் தாவரங்களதும் தாயகமாகும். இந்த பகுதியானது களனி ஆற்றின் கீழே தரம் 3, தரம் 4 வேக படகுச் சவாரி மற்றும் மலைக்காடுகள், தேயிலை, இரப்பர் தோட்டங்கள் ஊடான மலையேற்றம் அல்லது மலை பைக் சவாரிகள் உள்ளிட்ட சாகச நடவடிக்கைகளுக்குப் பிரபலமானது. இங்குள்ள அற்புத அழகு நிறைந்த இயற்கைக் காட்சிகள் டேவிட் லீனின் ஒஸ்கார் விருது பெற்ற `The Bridge over the River Kwai' படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த கிதுல்கல வனக் காப்பகத்துக்கு செல்வதன் தனித்துவமான அனுபவமாக ஆற்றின் குறுக்கேயான படகுப் பயணம் அமைகின்றது.


சிங்கராஜ வனத்துக்கு அடுத்தபடியாக, கிதுல்கல வனப் பகுதியானது தாழ்நிலப் பகுதிசார் பறவையினங்களில் பெரும்பாலானவற்றைக் காணும் சிறந்த மழைக்காடாகும். பச்சைத் தாடைக் குயில்கள், கசுக்கொட்டை நிற ஆந்தை, செம்முகப் பூங்குயில், இலங்கையின் புள்ளிச் சிறகு பாடும் பறவை, சாம்பல் இருவாய்ச்சி, இலங்கைச் சுண்டங்கோழி, இலங்கைக் காட்டுக்கோழி, மஞ்சள்முக குக்குறுவான் உள்ளிட்ட பறவையினங்களின் வாழ்விடமாக இது இருக்கிறது. புதிதாக அறியப்பட்ட செரண்டிப் பட்டைக் கழுத்து ஆந்தையும் இந்தக் காட்டில்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பூச்சி விரட்டிகளுடன், அட்டைக்கடியைத் தடுக்கவல்ல காலுறையும் அணிந்தபடி இந்தக் காட்டுக்குள் நுழைவது புத்திசாலித்தனமாகும். இங்கு காணப்படும் பாலூட்டி இனங்களில் இந்திய நரை அணில், லேயர்டின் கோடிட்ட அணில், ஊதாமுக இலைக் குரங்குகள் ஆகியவை அடங்கும். இங்குள்ள நீரோடைகளில் உள்ளூர் மீனினங்களும், பல வகை நீர்நில வாழ்வனவும் உள்ளன. காதில்லா பல்லி, கங்காரு பல்லி, கூம்பு மூக்கு பல்லி ஆகிய ஊர்வன இனங்கள் களனி ஆற்றில் அடிக்கடி காணக்கிடைக்கின்றன. 
 

 

More things to do